ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்ததையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் விலை பெருமளவு ஏற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அதன் எதிரொலி இந்தியப் பங்குச்சந்தைகளிலும் நன்கு தென்பட்டது. இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தன. இந்தச் சூழலில், பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் சந்தித்த சறுக்கலால் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலிருந்து பின்னடைவைச் சந்தித்தார் முகேஷ் அம்பானி. கடந்த மாதத்தில், சீனாவின் அலிபாபா நிறுவன நிறுவனர் ஜாக் மா இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
இந்தச் சூழலில், ரூ.43,574 கோடியை ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து, அந்நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை வாங்கியது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜியோ நிறுவனத்தின் மொத்த மதிப்பு 4.6 லட்சம் கோடியாக உயர்ந்தது. இரு பெரும் நிறுவனங்களுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. இதன் விளைவாக ஒருநாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 49 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலிருந்த ஜாக் மா- வை பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.