புதுச்சேரியில் இரண்டு நாட்கள் டிரோன்கள் உட்பட ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன. இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் சிங்காரா விமானப்படைத் தளத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கிருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு மசினகுடி வந்தடைந்தார். அப்போது தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளியை சந்தித்தார். அதன் பிறகு மீண்டும் மசினகுடிக்கு சென்று அங்கிருந்து மாலை 5 மணிக்கு மைசூர் செல்கிறார்.
இதனைத் தொடர்ந்து மைசூரிலிருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு சென்னை வரும் குடியரசுத் தலைவர் நாளை (6.8.2022) சென்னை பல்கலைக்கழகத்தின் 165 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, உரை நிகழ்த்தவுள்ளார். பின்னர் இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர், மறுநாள் திங்கட்கிழமை (7.8.2023) அன்று காலை புதுச்சேரிக்கும் செல்லவுள்ளார். குடியரசுத் தலைவர் சென்னை வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியரசுத் தலைவரின் புதுச்சேரி வருகையையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதால் புதுச்சேரியில் ஆகஸ்ட் 7 மற்றும் 9 ஆகிய இரு நாட்கள் டிரோன்கள் உட்பட ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.