மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்றிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இந்தியாவில் 415 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இதுவரை எட்டு பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் 19 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "நேற்று நாங்கள் மாநில எல்லைகளுக்குச் சீல் வைத்தோம், இன்று மாவட்ட எல்லைகளுக்கும் சீல் வைக்கிறோம். தற்போது வரை பாதிக்கப்படாத மாவட்டங்களுக்கும் கரோனாவைப் பரவ அனுமதிக்க மாட்டோம். எனவே மாநிலம் தழுவிய ஊரடங்கை அறிவிக்கிறோம். மக்கள் அரசின் அறிவுரைகளைக் கேட்காததால், இந்த முடிவை எடுக்க நிர்பந்திக்கப்பட்டுளோம். மளிகை பொருட்கள், பால், மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும். மக்கள் பீதி அடையத் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.