கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நான்காவது முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (14/04/2020) உரையாற்றினார். கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வரும் பகுதிகளில் ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (15/04/2020) வெளியிட்டுள்ளது. அதன் படி ஏப்ரல் 20- ஆம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைப்பொருள், கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பிறகு எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர், மெக்கானிக் தொழில் செய்வோருக்கு அனுமதி. சிறு, குறு தொழில் ஈடுபடுவோர் பணிகளைத் தொடரலாம். முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி. 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிகளைத் தொடரலாம். விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள், பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 வசூலிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் மக்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது மாநிலங்களில், மாவட்டங்களை விட்டு பிற மாநிலம், மாவட்டத்துக்குச் செல்ல தடை நீடிப்பு. திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க மத்திய அரசு தொடர்ந்து அனுமதியளித்துள்ளது. கிராமப் பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள், ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்கள் செயல்படலாம். சமூக இடைவெளியுடன் ஆலைகள் இயங்கலாம்.
கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது. ஏப்ரல் 20- ஆம் தேதி முதல் நெடுஞ்சாலையோர ஓட்டல்களான தாபாக்களைத் திறக்க அனுமதி. கனரக வாகன பழுது பார்ப்பு கடைகளைத் திறக்க அனுமதி. அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களைத் திறக்கலாம். கரோனா அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் பொருந்தாது.
ஊரடங்கின் போது மளிகை, காய்கறி கடைகள், பால் விற்பனை நிலையங்கள் செயல்படலாம். இறைச்சிக்கடைகள், மீன் விற்பனை கடைகளை ஊரடங்கின் போது திறக்கலாம். ஐ.டி. நிறுவனங்கள், ஐ.டி. தொடர்பான சேவைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம். கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி; அத்தியாவசியப் பொருட்களை மட்டும் விநியோகிக்கலாம். கேபிள், DTH சேவை நிறுவனங்களும் இயங்கலாம்". இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.