உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. பிரதமர் மோடியும் அடிக்கடி உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்து வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தச்சூழலில் அலகாபாத் உயர்நீதிமன்றம், உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலை நிறுத்துவது குறித்துப் பரிசீலியுங்கள் என பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாவது. "உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்தல் நெருங்குவதால், அதற்காக அரசியல் கட்சிகள் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தி லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி வருகின்றன. இந்த கூட்டங்களில் கரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாது. இதை (கூட்டம் கூடுவதை) சரியான நேரத்தில் நிறுத்தாவிட்டால், அதன் விளைவு இரண்டாவது அலையை விட அச்சமூட்டும் ஒன்றாக இருக்கும்.
"முடிந்தால் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்படுள்ள தேர்தலை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும், ஏனென்றால் வாழ்க்கை தொடர்ந்தால் மட்டுமே, தேர்தல் பேரணிகளும் தொடரும். இவ்வளவு பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில் இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தை நமது மாண்புமிகு பிரதமர் தொடங்கியுள்ளார். இது பாராட்டுக்குரியது, நீதிமன்றமும் பாராட்டுகிறது. அச்சம் தரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேரணிகள் மற்றும் தேர்தல்களை நிறுத்துவது மற்றும் ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாண்புமிகு பிரதமரை கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.