
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நான்கு நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், டெல்லி ஜவஹர்லால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர், சிறப்பு சிகிச்சைக்காக அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வன்கொடுமையில் ஈடுபட்ட கும்பல் பெண்ணின் பெற்றோரை காவல்துறைக்கு புகார் அளிக்கக்கூடாது என மிரட்டியுள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், ஒருவாரம் கழித்து ஹத்ராஸ் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், நீதிபதியிடம் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களைக் கூறிய நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கொலைச்சம்பவத்தில் ஈடுபடல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.