உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநில தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக கருதப்படுவதால், இந்தத் தேர்தல்களின் முடிவுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதிலும், உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் இந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை தங்களது பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் சந்திக்கவுள்ளது. இந்தச் சூழலில் இன்று (19.10.2021) செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி, "உத்தரப்பிரதேச தேர்தலில், 40 சதவீத சீட்டுகள் பெண்களுக்கு வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.
பெண் வாக்காளர்களைக் கவரும் விதமாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக கருதப்படுகிறது. இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முடியும்வரை, பிரியங்கா காந்தி லக்னோவில் தங்க உள்ளதாகவும், அம்மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.