மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போரட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. மேலும் செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக்கொடி ஏற்றப்பட்டது.
இந்நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, செங்கோட்டையில் மக்களை அனுமதித்ததன் நோக்கம் என்ன என்று உள்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்புமாறு கூறியுள்ளார். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணுவதற்கு வேளாண் சட்டங்களைக் குப்பையில் போடுவதே தீர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி, "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று விவசாயிகளிடம் சொல்ல விரும்புகிறேன், ஒரு அங்குலம் கூட பின்வாங்க வேண்டாம், அவர்களை உங்கள் நிலங்களை எடுக்கவிடாதீர்கள்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், "செங்கோட்டையில் மக்கள் ஏன் அனுமதிக்கப்பட்டனர்? அவர்கள் ஏன் நிறுத்தப்படவில்லை? அந்த நபர்களை வளாகத்திற்குள் அனுமதித்ததன் நோக்கம் என்ன என்று உள்துறை அமைச்சரிடம் கேளுங்கள். இது உள்துறை அமைச்சகத்தின் ஒரு குறைபாடு அல்லவா?" எனவும் கேள்வியெழுப்பி உள்ளார்.
தொடர்ந்து ராகுல் காந்தி, "அரசாங்கம் விவசாயிகளுடன் பேசி தீர்வுக்கு வர வேண்டும். சட்டங்களை ரத்துசெய்து அவற்றை குப்பைத்தொட்டியில் போடுவதுதான் ஒரே தீர்வு. விவசாயிகள் வீட்டிற்குச் செல்வார்கள் என்று அரசு கண்டிப்பாக நினைக்கக்கூடாது. அவர்கள் செல்லமாட்டார்கள். இந்தப் போராட்டம் பரவும் என்பதே எனது கவலை. நமக்கு அது தேவையில்லை. நமக்குத் தீர்வே தேவை. விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையே எங்களுக்குத் தேவை" என அவர் கூறினார்.