அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று (20/08/2021) மாலை 04.30 PM மணியளவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, சரத்பவார், பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்டவைக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், "காஷ்மீரில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்; வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல் நடத்த வேண்டும். கரோனா தடுப்பூசித் திட்டத்தை நாடு முழுவதும் விரைந்து செயல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர், சமையல் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களை ரத்துச் செய்து குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிச் செய்ய வேண்டும். பள்ளிகளைத் திறக்க உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடுவதில் முன்னுரிமை தர வேண்டும். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். வரும் செப்டம்பர் மாதம் 20- ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வரை போராட்டம் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உத்தரபிரதேசத்தில் ஊரக பகுதியில் இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.