உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பும் 400 - ஐ நெருங்கி வருகிறது. உத்தரப்பிரதேசத்திலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது.
இதனால் உத்தரப்பிரதேச தேர்தல் திட்டமிட்டபடி அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறுமா என்ற கேள்வி மெல்ல எழத் தொடங்கியுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் மோடிக்கும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம் என பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் . இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒமிக்ரானுக்காக ஊரடங்கு போடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியின் கீழ், உ.பி தேர்தல் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டாலும் ஆச்சரியமடைய வேண்டாம். இந்தாண்டு தொடக்கத்தில் நேரடியாக செய்ய முடியாததை, அடுத்தாண்டு தொடக்கத்தில் மறைமுகமாக செய்யலாம்" எனக் கூறியுள்ளார்.