நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று காலை திடீரென பாஜக ஆட்சியமைத்தது.
மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், “பாஜகவுடன் கூட்டணி என்பது, அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை. அதேபோல அஜித்பவாரின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை" என தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அஜித் பவாரின் இந்த திடீர் கூட்டணியை விமர்சித்துள்ள சிவசேனாவின் சஞ்சய் ராவத், "அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களையும், எங்களையும் முதுகில் குத்தியுள்ளார். உத்தவ் தாக்கரே மற்றும் ஷரத் பவார் ஆகியோர் நட்புறவிலேயே உள்ளனர். அவர்கள் இன்று நேரில் சந்தித்து பேச உள்ளார். மேலும் அவர்கள் ஊடகங்களை ஒன்றாக சந்திக்கவும் திட்டமுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், அஜித் பவாரும் அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களும் சத்ரபதி சிவாஜி மற்றும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர்" என தெரிவித்துள்ளனர்.