ஆந்திரப் பிரேதசம் மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு, ஆந்திராவின் தலைநகரான ஹைதராபாத் நகரம் இருந்தது. அதன் பின்னர், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிந்தது. இதையடுத்து, ஹைதராபாத் என்பது தெலுங்கானாவின் தலைநகராக மாறியதால் ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது. இதில் அமராவதியில் தலைமைச் செயலகம், சட்டசபை அமைக்கப்பட்டு கூட்டங்கள் நடந்து வந்தன.
இதற்கிடையே, ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஆந்திராவில் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். அதன்படி, அமராவதி, கர்னூல், விசாகப்பட்டினம் என 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று கூறினார். மேலும், அதில் அமராவதி தலைநகரில் சட்டசபை கூட்டம் நடக்கும், கர்னூல் தலைநகரில் உயர்நீதிமன்றம் செயல்படும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று கூறினார்.
இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார். அதில் அவர், விரைவில் விசாகப்பட்டினம் ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக மாற உள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, ஆந்திரா மாநில அமைச்சரவைக் கூட்டம் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.. அந்த கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, 'விசாகப்பட்டினம் புதிய தலைநகராக மாற்றப்படும். மாநிலத்தில் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என அறிவித்தார். மேலும், அவர் விசாகப்பட்டினம் விஜயதசமி தினமான அக்டோபர் 23 ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும்’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத், “அக்டோபர் 23 ஆம் தேதி விஜயதசமி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பணியாற்றுவார்” என்று தெரிவித்தார்.