
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட் கடந்த 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று (26-03-25) சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அதில், அறந்தாங்கியில் புதிய காவல் நிலையம் அமையுமா? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழக முதல்வர், “காவல் நிலையம் வேண்டும், தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று பல உறுப்பினர்கள் கோரியுள்ளனர். 72 காவல் நிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 23 தீயணைப்பு நிலையங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி காவல் நிலையத்தை 2ஆக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த ஆண்டுகளில் பதிவான வழக்குகளின்படி பார்த்தால் புதிய காவல் நிலையம் அமைக்க தேவை எழவில்லை. அதே போல், அயப்பாக்கம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டிய தேவை எழவில்லை.
சாத்தியக்கூறு அடிப்படையில் புதிய காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை மானியக் கோரிக்கையில் உறுப்பினர்கள் திருப்தி அடையும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும். ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணி மே மாதம் தொடங்கப்படும். ரூ.2.59 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் இந்த கட்டடம், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திறக்கப்படும். கோவை மாவட்டம் சூலூர் தீயணைப்பு நிலையத்துக்கு நிரந்தர கட்ட இடம் கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.