
ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அரசு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த விடுதியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், 7ஆம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து உடல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், கீழ்த்தரமான வேலைகளைச் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், விடுதி காப்பாளரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்பு மாணவர் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது, அந்த மாணவர் போலீஸ் காவலில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மற்ற மாணவர்களும் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.