
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று (25-03-25) மாரடைப்பால் காலமானார். 1999ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படம் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா போன்ற படங்களில் நடிகராக நடித்தார். வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் தனது கதாபாத்திரத்தால், ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். சமீபத்தில், மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.
மாரடைப்பால் காலமான மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் எனப் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், சூர்யா, கார்த்தி, பிரபு உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், மறைந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு பாடலாசிரியரும், எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
“மகனே மனோஜ்!
மறைந்து விட்டாயா?
பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?
‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா’
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?
உன் தந்தையை
எப்படித் தேற்றுவேன்?
‘எனக்குக் கடன் செய்யக்
கடமைப்பட்டவனே!
உனக்கு நான் கடன்செய்வது
காலத்தின் கொடுமைடா’ என்று
தகப்பனைத் தவிக்கவிட்டுத்
தங்கமே இறந்துவிட்டாயா?
உன் கலைக் கனவுகள்
கலைந்து விட்டனவா?
முதுமை - மரணம் இரண்டும்
காலத்தின் கட்டாயம்தான்.
ஆனால், முதுமை
வயதுபார்த்து வருகிறது;
மரணம் வயதுபார்த்து
வருவதில்லை
சாவுக்குக் கண்ணில்லை
எங்கள் உறக்கத்தைக்
கெடுத்துவிட்டவனே!
உன் உயிரேனும்
அமைதியில் உறங்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.