நீண்ட இழுபறிக்கு பின்னர் டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மீ கட்சிகளுக்கு இடையே கூட்டணி உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கூட்டணி இறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 3 தொகுதியிலும், ஆம் ஆத்மி 4 தொகுதியிலும் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெல்லியை தவிர ஹரியானா மாநிலத்திலும் இந்த இரு கட்சிகளும் கூட்டாக செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்த நிலையில் இந்த முடிவு தற்போது மக்களவை தேர்தலில் புதிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.