கடந்த மாதம் உலக வங்கி, உலகில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் தர வரிசையை பட்டியலிட்டிருந்தது. இந்த பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை விட 23 இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்தது. இந்த பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வரவேண்டும் என்பது தேசிய ஜனநாயக கூட்டணியின் கனவாக இருக்கிறது. இந்த கனவை நினைவாக்க டெல்லியில் இன்று மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் சார்பில் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு, இந்திய தொழில் மற்றும் வர்த்தக தொடர்புடைய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட முன்னணி தொழில் அதிபர்கள், மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்பதாக உள்ளது.