Skip to main content

‘கோவில்களில் இந்துக்களுக்கு மட்டும் பதவி’ - ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி!

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
chandrababu naidu speech about laddu affair

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. இது விவகாரம் தொடர்பாக, அம்மாநிலத்தில் உள்ள சிறப்பு விசாரணைக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகின்றது. 

இதற்கிடையே, திருப்பதி கோவிலுக்கு செல்லவிருந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, திடீரென்று அந்த பயணத்தை ரத்து செய்தார். திருப்பதி கோவிலுக்கு தனது வருகையை தெலுங்கு தேசம் கட்சி தடுக்கிறது என்று கூறி அந்த பயணத்தை ரத்து செய்தார். இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் இந்துகளுக்கு மட்டும் பதவி வழங்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திரா மாநிலம், அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

அப்போது அவர், “திருப்பதி தேவஸ்தானத்துக்கு தனி கொள்கையும், கலாச்சாரமும் உள்ளது. அதை, மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். ஜெகன்மோகன் ரெட்டி கோவிலுக்கு போகக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. சமீபகால சர்ச்சைகளால், இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டு, பக்தர்கள் போராட்டங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர் திருப்பதிக்கு வருகை தந்தால், தாங்களும் அணிதிரள்வதாக இக்குழுக்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த காலங்களில், ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியின் விதிமுறைகளை மீறிச் சென்று வந்தார். மேலும், அதை அவர் தொடர நினைத்தது நியாயமற்றது. தன்னுடைய வீட்டில் பைபிளைப் படிப்பேன், மற்ற மதங்களை மதிக்க வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறும்போது, ​​மத மரபுகளை மதித்து திருப்பதி தேவஸ்தான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். ஒரு இந்துவாக, நான் பூஜை செய்கிறேன். நான் ஒரு தேவாலயம் அல்லது மசூதிக்குச் செல்லும்போது, ​​அவர்களின் பாரம்பரியங்களையும் மதிக்கிறேன். மத நல்லிணக்கத்தை பேண வேண்டும். அவர் அறிக்கையை சமர்பிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் பாலாஜியை வழிபட திருப்பதிக்கு செல்வதை தவிர்த்து வருகிறார். தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் அந்தந்த தலைவர்களால் வழிநடத்தப்படுவது போல், இந்து மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் தான் கோயில்களை வழிநடத்த வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவோம்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்