
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் வலுவான தலைமையை விரும்புகிறார்கள், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் தலைமையில் நாடு எப்படி முன்னேறி உலக அளவில் பெயர் பெற்றுள்ளது. இப்போது, மக்கள் அதன் தொடர்ச்சியை காண விரும்புகிறார்கள். மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
தமிழகத்தில் மாற்றத்தின் கடலைப் பார்க்க முடிந்தது. பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் மிகுந்த எழுச்சி தெரிகிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வை மக்கள் நம்பிக்கை கதிராகப் பார்க்கிறார்கள். இந்த முறை தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குகளைப் பெறப் போகிறது என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.