தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதகளுக்கு ஒப்புதல் அளிக்காதது, மசோதாக்களை கிடப்பில் போடுவது, அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர் அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த நிலையில், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழு தொடர்பான விவகாரத்தை சேர்த்து விசாரிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது. பல்கலைக்கழகங்களில் காலி பணியிடமாக உள்ள துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவுறுத்தினார். ஆனால், யு.ஜி.சி பிரதிநிதியை விடுத்து மூன்று உறுப்பினர்களை கொண்ட தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்றும், யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து தேடுதல் குழுவை சேர்க்க வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, தற்போது உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ‘சட்டவிதி இல்லாத நிலையில் தன்னிச்சையாக குழு அமைத்து அதை அரசாணையாக வெளியிட கூறுகிறார் ஆளுநர். துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் சாசன நடைமுறை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஆளுநர் அதிகாரம் விவகாரத்தில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான ஆளுநரின் செயல்பாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.