Skip to main content

நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Release of NEET Re-examination Results

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.மறுபுறம் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. 1,563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில்  ஜூன் 23ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 816 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்நிலையில் நீட் மறு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. www.exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் நீட் மறு தேர்வு முடிவுகளை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Attention those who have applied for the secondary teacher exam

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்தது. அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்யக் கூடுதல் கால அவகாசம் கோரினர். அதனடிப்படையில் இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யக் கடைசி தேதி 15.03.2024 இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. மேலும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த தேர்வானது வருகின்ற 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் எனத்  தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Attention those who have applied for the secondary teacher exam

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வு வரும் 21 ஆம் தேதி (21.07.2024) அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 26 ஆயிரத்து 510 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் இன்று (02.07.2024) முதல் அவர்களது பயனர் குறியீடு (User id) மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வாரக் காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

போட்டித் தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன முதல்வர்!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
CM gave good news to the competitive candidates!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக விதி 110 இன் கீழ், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026 அம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை, இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை. இளைய சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிகக் கவனமாகச் செயல்பட்டு வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பைத்தான் இப்போது வெளியிட விரும்புகிறேன். 

CM gave good news to the competitive candidates!

வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அதன்மூலம் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நமது மாணவச் செல்வங்களுக்குத் தரமான பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் அளிக்கின்றோம். அத்துடன் அவர்களது வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியின் மூலமாக ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை நாம் உருவாக்கி வருகிறோம்.

நம் இளைஞர்கள்தான் நம் பலம். அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள். இதனை உணர்ந்த காரணத்தினால், தமிழ்நாடு அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே அரசுப் பணியினை எதிர்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியினை பேரவையில் தெரிவித்துக் கொள்கின்றேன். 

CM gave good news to the competitive candidates!

வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.

அதாவது வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.