ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபாராணி. இவர் அந்த தொகுதியில், பா.ஜ.க சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், ராஜஸ்தான் உட்பட15 மாநிலங்களில் இருந்து 57 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில், தமிழகம் உட்பட 11 மாநிலங்களை சேர்ந்த 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 4 இடங்களில் பா.ஜ.க சார்பில் கன்ஷியாம் திவாரி, பா.ஜ.க ஆதரவுடன் சுபாஷ் சந்திரா, மற்றும் காங்கிரஸ் சார்பில் 3 பேர் என 5 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பா.ஜ.க ஆதரவுடன் போட்டியிட்ட சுபாஷ் சந்திரா தோல்வியடைந்தார்.
இந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரிக்கு ஆதரவாக ஷோபாராணி வாக்களித்தாக கூறப்பட்டது. மேலும், ஷோபாராணி, தன் கட்சியின் உத்தரவை மீறி ஓட்டளித்தது என்பது பா.ஜ.க கட்சியினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்ததால் அவருக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு கட்சியில் இருந்து நீக்குவதாகவும் பா.ஜ.க தலைமை அறிவித்தது. இதையடுத்து, தன்னை சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைமை வலியுறுத்தியதாகவும், அதனை ஏற்க விருப்பமின்றி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஷோபாராணி ஊடகங்களில் தெரிவித்தார். இந்த நிலையில், நேற்று ஷோபாராணி எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள ஜூன்ஜூனு மாவட்டம் அரதாவதாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று (25-10-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையேற்று பங்கேற்றார். அந்த கூட்டத்தில் ஷோபாராணி எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்கள் 3 பேருடன் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இந்த வருட இறுதியில் நடைபெறும் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஷோபாராணிக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. அதனால், அவர் தன்னை, தன் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.