ஹைதராபாத்தில் ராமானுஜர் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துப் பேசி வருகிறார்.
1000 வருடங்களுக்கு முன்பு பிறந்து வாழ்ந்து மறைந்தவர் ராமானுஜர். அவருக்குத் தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங்களைக் கொண்டு 216 அடியில் பஞ்சலோக சிலை ஹைதராபாத்தில் முச்சிந்தலா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சர்தார் வல்லபாய் படேல் சிலை மிக உயர்ந்த சிலை என்ற நிலையில், அதற்கு அடுத்தகட்டமாகப் பிரதமர் மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்ட இச்சிலையை இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிலை என்ற இடத்தை பிடித்து இருக்கிறது.
தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து ராமானுஜர் காஞ்சிபுரத்தில் படித்து வளர்ந்தவர். ஸ்ரீரங்கத்தில் மறைந்தவர். அவராவது 1000வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்விற்காக ஹைதராபாத் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விழாவில் பிரதமர் மோடி மஞ்சள் நிற அங்கவஸ்திரம் அணிந்து இருந்ததோடு நெற்றியில் நாமம் போட்டு இருந்தார். சிலையைத் திறந்து வைத்த பிறகு பேசிய பிரதமர் மோடி, ''ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலையைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வசந்த பஞ்சமி தினத்தில் ராமானுஜர் சிலை திறப்பு விழா நடைபெறுவது மிகவும் சிறப்பு. ராமானுஜரின் ஆசியால் ஒரே இடத்தில் 108 திவ்ய தேசங்களைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ராமானுஜரின் ஞானம் நமக்கு வழிகாட்டுகிறது. இங்கே நடத்தப்பட்ட யாகத்தின் பலன் நம் நாட்டின் 130 கோடி மக்களுக்கும் கிடைக்கும். குருவின் மூலமே நாம் தியானம் செய்யும் திறன் பெறுகிறோம். குருவின் சிலையே தியான வழிகாட்டி. ராமானுஜரின் பணிகளிலேயே தமிழ்மொழி முக்கிய இடம் பெற்றிருந்தது. ராமானுஜனுக்கு நெருங்கிய தொடர்புடைய ஆலயங்களில் திருப்பாவை முக்கியத்துவம் பெறுகிறது. ஆலய வழிபாடுகளில் பட்டியலின மற்றும் ஏழை மக்கள் கலந்துகொள்ள வழிகோலியது சிறப்பானது'' என்றார்.