
முதல்வராக மு.க. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே கீழப்புலியூர் பகுதியில் ரேஷன் கடை அருகே குத்தாலிங்கம் என்பவர் தன் மனைவியின் கண்முன்னே மர்மநபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதே போல், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பொது இடங்கள் எல்லாவற்றிலும் ‘இது மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல’ என்று பதாகைகள் வைக்கப்பட வேண்டும் என்ற அளவில் தான் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது. தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படி ஒரு நிலை இருப்பதற்கு ஒரு முதல்வராக மு.க. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். ஆனால் அவர்? ‘தனிப்பட்ட பிரச்சனை’, ‘குற்றவாளிகள் கைது’ என்ற உங்கள் டெம்ப்ளேட் (Template) பதில்களைக் கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா?. ‘சட்டம்- ஒழுங்கு’ என்பது கைது செய்வது மட்டுமல்ல; குற்றங்களைத் தடுக்க, குற்றத்தை செய்யவே குற்றவாளிகள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு அரசின் காவல் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும்.
இதனை செய்ய நிர்வாகத் திறமை வேண்டும். ஆனால், இங்குள்ள முதலமைச்சருக்கு நிர்வாகத் திறன் என்பது தான் துளியும் இல்லையே?. ‘குற்றவாளிகளின் கூடாரம்’ என்ற நிலையில் இருந்து மாறி மீண்டும் ‘அமைதிப் பூங்கா’ என்ற நிலைக்கு தமிழ்நாடு மாற, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வீழ்ந்து, தமிழ்நாடு மாடல் அதிமுக ஆட்சி அமைவது ஒன்றே வழி. மேற்கூறிய குற்றச் சம்பவங்களில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.