
திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாகக் கொடைக்கானல் விளங்குகிறது. அதற்கு அடுத்தபடியாக சிறுமலை சுற்றுலாத் தளத்திற்குப் புகழ்பெற்றது ஆகும். இந்த சிறுமலை சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது திண்டுக்கல்லிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. கொடைக்கானல் மலையைவிட அதிகமாக 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது ஆகும். அதாவது கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இதன் காரணமாக, கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த சிறுமலைக்குத் தினசரி வந்த வண்ணம் உள்ளனர். அதே சமயம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாள்பட்டி அருகே காந்திகிராம பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் இன்று (16.04.2025) காலை 8 மணியளவில் சிறுமலையில் உள்ள பழங்குடியின மக்களைப் பற்றிய ஆய்வறிக்கை தயாரிக்க 2 பேருந்துகளில் சென்றுள்ளனர்.
அதன்பின்னர் பழங்குடியின மக்களிடம் ஆய்வு செய்துவிட்டு மாலை 4 மணியளவில் மீண்டும் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பியுள்ளனர். அதன்படி சிறுமலையில் இருந்து திரும்பும் போது 6வது கொண்டை ஊசி வளைவில் மாணவர்கள் பயணத்த பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 27 மாணவர்கள் காயமடைந்தனர். அதில் 6 பேருக்குத் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கிய 27 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.