காங்கிரஸ் ஆட்சியை குறை கூறிய அமித்ஷாவின் பேச்சுக்கு ப.சிதம்பரம் பதில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேர்தல் பிரச்சரம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் பிரச்சாரம் ஒன்றில் பேசிய அமித்ஷா, "காங்கிரஸ் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை. ஆனால் தற்போது மோடியின் ஆட்சியில் தேசம் பாதுகாப்பாக இருக்கிறது'' என்று பேசியிருந்தார்.
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், "காங்கிரஸ் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா சொல்கிறார். கடந்த 1947, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த 3 போர்களிலும் நாட்டைப் பாதுகாத்தது யார்? மோடியும், அமித்ஷாவும் இல்லாத போதும் நாடு பாதுகாப்பாக தான் இருந்தது. ஆனால் இப்போதுதான் பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இப்படி இருக்கும்போது இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்?" என கேட்டுள்ளார். மேலும், மக்களை அச்சப்படுத்தி ஆட்சி செய்ய முடியும் ஆனால், பயமுறுத்தி வாக்களிக்க வைக்கமுடியாது. மக்கள் அச்சமின்றி வாக்களிப்பார்கள் என கூறியுள்ளார்.