Skip to main content

ஷைலஜா டீச்சருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாதது ஏன்? - பினராயி விஜயன் விளக்கம்!

Published on 20/05/2021 | Edited on 20/05/2021

 

PINARAYI VIJAYAN

 

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள், மார்ச் மாதம் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதனைத் தொடந்து, மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியது.

 

இதனைத் தொடர்ந்து பினராயி விஜயனும், அவர் தலைமையிலான அரசும் இன்று (20.05.2021) பதவியேற்கின்றனர். இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முதல்வரை தவிர கடந்த முறை அமைச்சராக இருந்தவர்கள் யாருக்கும் இம்முறை அமைச்சர் பதவி வழங்கப்படாது என அறிவித்தது.

 

இந்த முடிவால் கடந்தமுறை கேரள சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்ற ஷைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் இடமில்லாமல் போனது. இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஷைலஜா டீச்சரை மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராக்க கோரி கோரிக்கைகள் எழுந்தன. சமூகவலைதளங்களிலும் அவரை மீண்டும் அமைச்சராக்கக் கோரி ஹாஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின.

 

இந்தநிலையில், ஷைலஜா டீச்சருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படாதது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள அவர், பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகளை மதிப்பதாகவும், ஆனால் புதிய முகங்கள் வர வேண்டும் என்பது கட்சியின் கொள்கை எனவும் தெரிவித்துள்ளார். 

 

மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், "முன்பு இருந்த பல அமைச்சர்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக தங்கள் துறைகளில் சிறப்பாக செயல்பட்டனர். (அமைச்சர்கள் நியமனத்தில்) யாருக்கும் எந்தவகையான விதிவிலக்கும் அளிக்கக் கூடாது என கட்சி முடிவெடுத்துள்ளது. புதிய நபர்களைக் கொண்டுவருவதுதான் கட்சியின் நிலைப்பாடு" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்