தப்லீக் ஜமாஅத் நிகழ்வில் பங்கேற்றவர்கள் இனி கண்டறியப்பட்டு அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அசாம் அமைச்சர் அறிவித்துள்ளார்.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது. 2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 4000க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 109 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் இந்தக் கரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தப்லீக் ஜமாஅத் நிகழ்வில் பங்கேற்றவர்கள் இனி கண்டறியப்பட்டு அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அசாம் அமைச்சர் அறிவித்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் நடந்த சிறப்பு மத வழிபாட்டுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தோனேசியா, தாய்லாந்து, உட்பட உலகின் பல இடங்களிலிருந்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் வந்திருந்தனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களில் நூற்றுக் கணக்கானவர்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள சூழலில், தப்லீக் ஜமாஅத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் தங்கள் மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "மத்திய மற்றும் மாநில அரசுகளின் தகவல்களிலிருந்து நாங்கள் பெற்ற பட்டியல்களின்படி, தப்லிக் ஜமாஅத் நிகழ்வில் அசாம் மாநிலத்திலிருந்து 831 பேர் கலந்துகொண்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளோம். இதில் 491 பேரின் மாதிரிகள் கரோனா சோதனைக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ளவர்களை அடையாளம் காணவும் அவர்களின் மாதிரிகளைச் சேகரிக்கவும் நாங்கள் மசூதி குழுக்களைத் தொடர்பு கொண்டுள்ளோம். தப்லீக் ஜமாஅத் நிகழ்வில் பங்கேற்றவர்கள் இனி கண்டறியப்பட்டு அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.