Skip to main content

“சோனியா காந்தியின் குடும்பத்தைக் கண்டு பா.ஜ.க அஞ்சுகிறது” - அசோக் கெலாட்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Ashok gehlot says BJP fears Sonia Gandhi's family

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு  கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

 

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3ஆம் தேதி வாக்கி எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. மேலும், இந்த தேர்தல் பிரச்சாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியல் செய்வதாகவும், சோனியா காந்தி அவரது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புவதாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், முதல்வர் அசோக் கெலாட் இன்று (16-11-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், பா.ஜ.க தொடர்ந்து வாரிசு அரசியல் என விமர்சித்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “கடந்த 30 ஆண்டுகளில் இந்திரா காந்தியின் குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராக பொறுப்பு வகிக்கவில்லை. அப்படி இருக்கையில், பா.ஜ.க ஏன் தொடர்ந்து வாரிசு அரசியல் என விமர்சித்து வருகிறது. சோனியா காந்தியின் குடும்பத்தை கண்டு பா.ஜ.க அஞ்சுகிறது என்பதால் தான் இப்படி அவதூறுகளை பரப்புகிறார்கள்.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் மாநில அரசு செய்த சாதனைகளையும், மாநில வளர்ச்சிகளையும் முன்வைத்து நாங்கள் வாக்கு சேகரித்து வருகிறோம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க சார்பில் எந்தவித சாதனைகளையும் செய்யவில்லை. சாதனைகளை முன்வைத்து வாக்கு சேகரிக்க முடியாததால் காங்கிரஸ் மீது அவதூறுகளை பரப்பி வாக்கு சேகரிக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வை கண்டு கேள்வி கேட்கிறது. அந்த கேள்விகளுக்கு பா.ஜ.க பதில் அளிக்க முடியாததாலும், தோல்வி பயத்தினாலும் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்