2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிமுகம் செய்தார்.
அப்போது பேசிய அவர், "இந்த மசோதா மோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையைத் தரும். பாகிஸ்தான் மற்றும் இன்றைய வங்கதேசத்தில் உள்ள மத சிறுபான்மையினரின் மக்கள் தொகையில் சுமார் 20% சரிவு ஏற்பட்டுள்ளது. ஒன்று அவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும், அல்லது தங்களையும் தங்கள் மதத்தையும் காப்பாற்றுவதற்காக தங்குமிடம் தேடி இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும். அவர்களுக்கு குடியுரிமை, வீடு வாங்க உரிமை, கல்வி, வேலைகள் ஆகியவை இதுவரை கிடைக்கவில்லை. இந்த மசோதா அப்படிப்பட்ட சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்கும்.
இந்த மசோதா இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இதைச் சொல்லும் மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், இந்த மசோதா இந்திய முஸ்லிம்களுடன் எவ்வாறு தொடர்புடையது? அவர்கள் இந்திய குடிமக்கள், எப்போதும் அப்படியே இருப்பார்கள், அவர்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இல்லை. இந்த மசோதா காரணமாக இந்தியாவில் எந்த ஒரு முஸ்லிமும் கவலைப்பட தேவையில்லை. யாராவது உங்களை பயமுறுத்த முயற்சித்தால் பயப்பட வேண்டாம். இது நரேந்திர மோடியின் அரசு, அரசியலமைப்பின் படி செயல்படுகிறது, சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும்" என தெரிவித்தார்.