'ஜிகா' வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாகியுள்ளதால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவ சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் உருவாகும் ஜிகா வைரஸ் தொற்று பரவல் தற்போது மகாராஷ்டிராவில் அதிகமாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை எட்டு பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. காய்ச்சல், தலைவலி, தோல் வெடிப்பு, மூட்டு வலி, கண் இமைகளில் வீக்கம் ஆகியவை ஏழு நாட்களுக்கு மேல் நீடித்தால் அவை ஜிகா வைரஸ் தாக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உடனடியாக இந்த அறிகுறிகள் இருப்போர் மருத்துவரை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகலில் கடிக்கும் ஏடிஎஸ் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவில் உள்ள குழந்தைகளை தாக்கும் அபாயம் கொண்டது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் இது தொடர்பாக கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதேநேரம் ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.