புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரெஞ்ச் ஆட்சி காலத்தில் இருந்து "பாண்டிச்சேரி டிஸ்லேட்டர் பேக்டரி " என்ற மதுபான தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில் சாராயம் மற்றும் மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. 1990-ஆம் ஆண்டு சாராய ஆலை கழிவு கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் அழிவதாக புகார் எழுந்ததால் அந்த ஆலை மூடப்பட்டது. அதன் பிறகு அந்த சாராய ஆலை ஆரியபாளையம் பகுதியில் தற்போது இயங்கி வருகிறது.
இந்நிலையில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. அங்கு மத்திய அரசின் நிதி உதவியோடு சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதற்காக பாதுகாப்பற்ற அந்த பழைய கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இடிக்கப்படும் போது கிடங்கில் பெட்டி பெட்டியாக மதுபான பாட்டில்கள், பெட்டிகள் கிடைத்துள்ளன. 1990 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்கள் அங்கு இன்னும் உள்ளன. 28 ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள குடோனில் பெட்டி பெட்டியாக இந்த மது பாட்டில்கள் இருந்துள்ளன.
கட்டிட இடிப்பின் போது மதுப்புட்டிகளை பார்த்து வியப்படைந்த பணியாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அந்த மதுப்புட்டிகளை பாதுகாக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.