கர்நாடகாவின் பெல்காம் பகுதியில் ஒரு அங்குல இடத்தை கூட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தர முடியாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா பாம்பே பிரசிடென்சியாக இருந்த காலத்தில் கர்நாடகாவின் பெல்காம் பகுதி பாம்பேவுடன் இணைந்திருந்தது. பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் உருவானபோது பெல்காம் கர்நாடகாவின் பகுதியாக அறிவிக்கப்பட்டது. பெல்காம் யாருக்கு சொந்தம் எனும் இந்த வழக்கு பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மராட்டிய மொழி பேசும் கர்நாடக கிராமங்களை மஹாராஷ்டிராவுடன் இணைக்க போராடி வரும் மகாராஷ்டிரா எக்கிகரன் சமிதி அமைப்புக்கும் கன்னட அமைப்பு ஒன்றிற்கும் ஏற்பட்ட வார்த்தை போர் காரணமாக இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பல அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பேருந்து போக்குவரத்துக்கு நேற்று நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எடியூரப்பா, "மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவுக்கான எல்லைப் பகுதி எது என்பது மகாஜன் ஆணையத்தின் அறிக்கையின்படி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதுமாதிரியான சர்ச்சையை உருவாக்குவது நியாயமற்ற செயல். கர்நாடகாவிலிருந்து ஒரு அங்குல நிலம் கூட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கொடுக்க மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.