இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படை தளம் அமைந்துள்ளது. இங்கு கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த கப்பல்கள் கடற்கரைக்கு சென்று ரோந்து பணியில் தினமும் ஈடுபடும். அது போல், ஹெலிகாப்டர்களும், தினமும் வானில் பறந்து அங்குள்ள பகுதிகளை சோதனையிட ரோந்து பணியில் ஈடுபடும். அந்த வகையில், இன்று (04-11-23) இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘சேட்டாக்’ என்ற ஹெலிகாப்டர் ரோந்து பணியில் ஈடுபட தயாராக இருந்தது.
இந்த நிலையில், அந்த ஹெலிகாப்டரில் விமானியும் ,துணை விமானி மற்றும் அதிகாரி ஒருவர் என 3 பேர் பயணித்து புறப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் ஓடுதளத்தில் வேகமாக விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்ற 2 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், படுகாயமடைந்த அந்த 2 பேரை அருகில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட இருந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1967ஆம் ஆண்டு முதல் சேட்டாக் ஹெலிகாப்டரை இந்திய கடற்படைக்கு பயன்படுத்தி வருகின்றனர். வரும் 2027ஆம் ஆண்டுக்குள் இந்த ஹெலிகாப்டர்கள் ஓய்வு எடுக்க உள்ள நிலையில், இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.