ரிக்சா ஓட்டும் ஏழை முதியவர் ஒருவருக்கு மூன்றுகோடி ரூபாய் வருமானவரி பாக்கியைக் கட்டும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பாகல்பூர் அமர் காலனி பகுதியில் ரிக்சா ஓட்டிவருபவர் முதியவரான பிரதாப் சிங். இவருக்கு அண்மையில் வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், தாங்கள் ஈட்டிய வருமானத்திற்கான வருமானவரி பாக்கி 3,47,54,796 ரூபாயை விரையில் செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ந்த ஏழை முதியவரான பிரதாப் சிங் வருமான வரித்துறையின் இந்த அதிர்ச்சி நோட்டீஸ் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரிக்சா ஓட்டுநர் பிரதாப் சிங்கின் பான் கார்டு மூலம் யாரோ ஜி.எஸ்.டி எண்ணைப் பெற்று மோசடியாகத் தொழில் செய்துவந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாகத் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.