மகாராஷ்டிராவில் 6 இடங்கள், கர்நாடகாவிலும், ராஜஸ்தானிலும் தலா 4 இடங்கள், ஹரியானாவில் 2 இடங்கள் என 16 மொத்தம் இடங்களுக்கு இன்று (10/06/2022) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இல்லாத அரசியல் கட்சிகளும், சுயேச்சைகளும் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளதால், தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் சட்டப்பேரவை வளாகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஸ்ரீநிவாச கவுடா, தனது கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்காமல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார். இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேட்டியளித்த ஸ்ரீநிவாச கவுடா எம்.எல்.ஏ., தனக்கு காங்கிரஸ் கட்சிப் பிடிக்கும் என்பதால், அந்த கட்சி வாக்களித்ததாகத் தெரிவித்துள்ளார்.
மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி கூறுகையில், "தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சி விலைக்கு வாங்க முயற்சி செய்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களைத் தொடர்புக் கொண்டு பேரம் பேசி வருகிறார்" என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காலியாக உள்ள நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பா.ஜ.க. சார்பில் மூன்று பேரும், காங்கிரஸ் சார்பில் இரண்டு பேரும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஒருவரும் போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.