ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு நேற்று தாக்குதல் நடத்தியது. 78 வாகனங்களில் மொத்தம் 2,500 வீரர்கள் பேருந்தில் பயணித்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 45 துணை ராணுவ படையினர் பலியாகினர். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று காலை 9.15-க்கு கூடியது. பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அருண்ஜெட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். தாக்குதல் மீதான எதிர் நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தற்போது ஸ்ரீநகர் விரைகிறார்.