
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை ஆரம்பித்து களம் கண்டனர். அதில், பா.ஜ.கவை மைனாரிட்டி அரசாக மாற்றி ஆட்டம் காண வைத்தது. அதன் பிறகு, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இணைந்து கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இந்த தேர்தலில், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி படு தோல்வி அடைந்தது.
இந்த சூழ்நிலையில், தேசமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக போட்டியிட்டது. இதனால், பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என்று டெல்லி தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது. பா.ஜ.க மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியும், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், பா.ஜ.க அதிக இடங்களை பிடித்து டெல்லியை கைப்பற்றியது.
காங்கிரஸின் தொடர் தோல்வியினால், அக்கட்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த நிலையில், இனிமேல் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தால் முக்கிய பிரமுகர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம்பெற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “பொறுப்புணர்வு என்ற மிக முக்கியமான விஷயம் பற்றி நான் உங்களுடன் பேச விரும்புகிறேன். மாநிலங்களில் உள்ள அமைப்புகளை மறுசீரமைப்பதற்கும், எதிர்கால தேர்தல் முடிவுகளுக்கும் நீங்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். சில நேரங்களில் ஒரு அமைப்பை வலுப்படுத்த முயற்சிக்கும்போது, கடினமான காலங்களில் ஓடிப்போகும் நபர்கள் அவசரமாக அழைத்து வரப்படுகிறார்கள். அத்தகையவர்களிடமிருந்து நாம் விலகி இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.