இந்திய தேர்தல்களில், போட்டியிடும் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத மக்கள், நோட்டோவிற்கு வாக்களித்து வருகின்றனர். பல நேரங்களில் பல இடங்களில் கட்சி சார்பாக போட்டியிடும் சில வேட்பாளர்களைவிட நோட்டா அதிக வாக்குகளைப் பெற்று வருகிறது. ஆனால் இந்த நோட்டா என்பது மக்களை வாக்களிக்க வைக்கும் ஒரு முயற்சியாக மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளதே தவிர, அது தேர்தல் முடிவுகளைப் பாதிக்காது.
இந்தநிலையில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவானால், அந்தத் தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (15.03.2021) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவானால் மறுதேர்தல் நடத்துவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.