திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நவம்பர் 27 ஆம் தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த 12 நாள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு வரும் ஒன்பது சாலைகளிலும் தற்காலிக பேருந்து நிலையம், கிரிவலப் பாதையில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, தற்காலிக பேருந்து நிலையங்களில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம், தனியார் வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் வருவாய்த் துறையுடன் சேர்ந்து செய்து வருகின்றது.
திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் போன்றவற்றை நகராட்சியுடன் இணைந்து நெடுஞ்சாலைத்துறை செய்து வருகின்றது. அறநிலையத்துறை கோவில் தேர்களைச் சீரமைப்பது உள்ளிட்ட கோவில் பணிகளைச் செய்து வருகின்றன.
தீபத் திருவிழாவின் ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும் ஆலோசனைக் கூட்டத்திற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நவம்பர் 16 ஆம் தேதி திருவண்ணாமலை வருகிறார். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு இருவரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர்.
இந்நிலையில் நவம்பர் 16 ஆம் தேதி நாடு முழுவதும் குறிப்பிட்ட இடங்களில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் கோவிலூர் கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்கிறார்.
அதே நவம்பர் 16 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் நடைபெறும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளுக்கான நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்துகொள்கிறார்.
இந்நிலையில் காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் நவம்பர் 15 ஆம் தேதி திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளார். கார்த்திகை தீபத்திற்கு காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.
ஒரே நாளில் கவர்னர், சபாநாயகர் அப்பாவு, இரண்டு முக்கிய அமைச்சர்கள், காவல்துறை தலைவர் போன்றவர்கள் திருவண்ணாமலையில் முகாமிடுகின்றனர்.
கவர்னருக்கு புரோட்டாக்கால்படி மாவட்ட உயர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் வரவேற்பு தரவேண்டும். அதே நேரத்தில் பல லட்சம் மக்கள் கலந்துகொள்ளும் பிரபலமான திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் உயர் அதிகாரிகள் முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சிகளால் காவல்துறை எப்படி பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்டவற்றால் திணறி வருகிறது. மாவட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா? கவர்னர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா? எனத் தெரியாமல் தவிக்கின்றனர் உயர் அதிகாரிகள்.
அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் கவர்னர், சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அரசு மீது மறைமுகமாக குற்றம் சாட்டி வருகிறார். தனக்கான ஏற்பாடுகள் சரியாக செய்யவில்லை என அரசு மீது குற்றம் சாட்டி பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை என்றாலோ அல்லது ஏதாவது குளறுபடி நடந்தாலோ கவர்னர் எப்படி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவார் எனத் தெரியவில்லையே என அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.