![chaos in the alliance for Shinde's Shiv Sena MLAs meet Sharad Pawar](http://image.nakkheeran.in/cdn/farfuture/aDlzvqJfLBS3lAfcPEbeQa3XmWZwJD99Bmqt07hLSLk/1739452171/sites/default/files/inline-images/sharashn.jpg)
மகாராஷ்டிராவில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்களான சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவி வகித்து வருகின்றனர். எதிர்தரப்பில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி, காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து மகா விகாஸ் கூட்டணியில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவார், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டி பேசியிருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மராத்தி சாகித்ய சம்மேளனம் என்ற வருடாந்திர இலக்கிய நிகழ்வை முன்னிட்டு, சர்ஹாத் என்ற அரசு சாரா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சரத் பவார், “சமீப ஆண்டுகளில், நகர்ப்புற பிரச்சினைகள் குறித்து நல்ல அறிவைக் கொண்ட தலைவராக ஏக்நாத் ஷிண்டே அறியப்படுகிறார். தானேயில் குடிமை நிர்வாகத்திற்கும், மாநில அரசுக்கும் ஷிண்டே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். எதிர்க்கட்சிகள் மீது அவர் எந்த விரோதத்தையும் வைத்திருக்கவில்லை, மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்தார்” என்று பாராட்டினார்.
ஏக்நாத் ஷிண்டேவைப் புகழ்ந்து பேசியிருப்பது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி ஆட்சேபணை தெரிவித்தது. சிவசேனாவைப் பிரித்து மகா விகாஸ் அரசாங்கத்தை வீழ்த்திய ஷிண்டே போன்ற துரோகியை பாராட்டியிருக்கக் கூடாது என்றும் இதனால் நாங்கள் வேதனைப்படுகிறோம் என்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா அணி எம்.பி சஞ்சய் ராவத் வேதனை தெரிவித்தார். இதனால், மகா விகாஸ் கூட்டணியில் பனிப்போர் வெடித்தது.
இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏக்களுக்கும், சரத் பவாருக்கும் இடையே சந்திப்பு நடந்துள்ளது. இது மீண்டும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை பிளவுப்படுத்தியும் மகா விகாஸ் கூட்டணி ஆட்சியை கலைத்தும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே புதிய அரசை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.