
சட்டவிரோதமாகக் குடியேறிய 104 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. அப்போது இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்ட போது பயணம் முழுவதும் கால்களில் சங்கிலி மாட்டியும், கைகளில் விலங்குகள் இட்டும் பயணித்தனர். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர், அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி, இந்த விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லை எனக் கண்டனம் எழுந்திருந்தது.
இதனைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை விமர்சித்து விகடன் சார்பில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதற்காக விகடன் இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் இது தொடர்பாக, ‘மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?’ எனக் குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?.
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.