தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகில் ரோத்தகி, வில்சன் ஆகியோர் ஆஜராகினர். அதேபோன்று மத்திய அரசு சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தார் ஆகியோர் ஆஜரானார்கள்.
தமிழக அரசு சார்பில், “உரிய விளக்கம் இன்றி ஆளுநர் ஆர்.என். ரவி மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். 7.3 கோடி மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை உள்ளது. ஆளுநரின் செயல்பாட்டால் 8 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருக்க முடியாது. சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினால் அதற்கான காரணத்தை ஆளுநர் கூற வேண்டும். மசோதா வெறுமனே நிராகரிக்கப்படுவதாக சொல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. தெலங்கானா ஆளுநருக்கு எதிரான வழக்கில் ஆளுநர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி இருந்தது. ஆளுநரிடம் 15 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. சட்டமன்றத்தில் 2வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் அது நிதி மசோதாவுக்கு நிகரானதாக மாறிவிடும்” என வாதிட்டனர். மேலும் “அரசியலமைப்பு சட்டத்தின் 200வது சட்டப் பிரிவின்படி நிலுவையில் வைத்திருப்பதாக ஆளுநர் கூற முடியாது” என்று மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி வாதிட்டார்.
இதனைப் பதிவு பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், “கடந்த 10 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், 13 ஆம் தேதி மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். மசோதாக்களை திருப்பு அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு உள்ளன” எனத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக சரமாரியான கேள்விகளை எழுப்பினார். அப்போது மசோதாக்கள் மீது சில பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதால் ஆளுநருக்கு அவகாசம் வழங்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 29 ஆம் தேதிக்கு (29.11.2023) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.