
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தின் வாயிலில் தமிழக அரசின் டாஸ்மார்க் கடை அமைந்துள்ளது. இந்த வழியாகத்தான் சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இறங்கும் அனைத்து ரயில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், இந்திரா நகர்ப் பகுதி மக்கள் சிதம்பரம் நகருக்கு வரவேண்டும். இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் தினந்தோறும் மதுபிரியர்கள் மதுபான பாட்டில்களை வாங்கி டாஸ்மாக் கடையின் வெளியே அமர்ந்து குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இவர்கள் சாலை ஓரத்தில் உள்ள ரயில் நிலைய சிமெண்ட் கட்டையில் அமர்ந்து மது அருந்துவதால் இவ்வழியாக இரவு நேரத்தில் ரயில் நிலையத்திற்குச் செல்பவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதனால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது.
மேலும் ரயிலிலிருந்து இறங்கி வரும் பயணிகள் இவர்கள் மது அருந்துவதைப் பார்த்தாலே என்ன வேடிக்கை என ஆபாசமான வார்த்தையில் திட்டுவது, அவர்களுக்கு எதிரே இயற்கை உபாதை கழிப்பது உள்ளிட்ட மிகவும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இது தினந்தோறும் ரயில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு முகசூளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுவைக் குடித்துவிட்டு பாட்டில்களைச் சாலையின் ஓரத்தில் உடைத்துப் போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (03.03.2025) மதியம் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு ரயில் நிலைய வாயில் முகப்பில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாகச் செல்வதற்குப் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் அச்சமடைந்தனர். இந்த ரகளையில் மது பிரியர்கள் அருகிலிருந்த ஏடிஎம் மையத்திற்கு அருகே இருந்த குப்பைகள் மற்றும் கருவேலமுட்கள் இருந்த முட்டுகளைக் கொளுத்தி விட்டுள்ளனர். இதனால் தீ மளமளவென எரிந்தது. தீ எரிந்து அருகே இருந்த ஏடிஎம் இயந்திரத்திற்குப் பரவ முயன்றபோது டாஸ்மாக் கடை அருகே இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்தால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கந்தனிடம் கேட்டபோது மாவட்ட மேலாளராகத் திங்களன்று பணியேற்றுக்கொண்டேன் உடனடியாக அந்த இடத்தை பார்வையிட்டு டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.