Skip to main content

“கோரிக்கைகளை ஒன்றிய அரசு தான் நிறைவேற்ற வேண்டும்” - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

Published on 03/03/2025 | Edited on 03/03/2025

 

Minister Anitha Radhakrishnan says Union Govt should fulfill the demands

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் தற்போது அரங்கேறி வருகின்றன.

இத்தகைய சூழலில் தான் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நான்காவது நாளாக இன்றும் (03.03.2025) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தங்கச்சிமடம் பகுதியில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, “கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடி உரிமையைப் பெற்றுத் தர வேண்டும்” என முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மீனவர்களை ஏமாற்றும் விதமாக ஆளுநர் இங்கு வந்து மனுக்களை வாங்கிட்டு சென்று இருக்கிறார். மீனவர்களின் 4 கோரிக்கைகளை ஒன்றிய அரசு தான் நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் உள்ள மீனவர்கள் விடுவிப்பதற்கு இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் தான் வேலை செய்ய வேண்டும். ஒன்றிய அரசு தலையிட்டுத் தான் முழு தீர்வு காண வேண்டும். அதற்கான அழுத்தத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்து, கனிமொழி எம்.பி. மூலம் மீனவர்களுக்கான விடுதலை பெற்றுத் தருவதற்கான சரியான நடவடிக்கைகள் ஒன்றிய அரசு மூலம் எடுக்கப்படும்” எனப் பேசினார். இதற்கிடையே நாளை (04.03.2025) தீக்குளிப்பு போராட்டம்  நடத்த இருப்பதாகவும் மீனவர்கள் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Minister Anitha Radhakrishnan says Union Govt should fulfill the demands

முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று (02.03.2025) மீனவர்களைச் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில், “ராமேஸ்வரத்துக்கு இன்று (02.03.2025) நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்