தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களிலேயே தேர்வு எழுதவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு வரும் 6ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு சமீபத்தில் வெளியானது. அதில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அருகாமை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதைக் கண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதற்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் அமைப்பைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கவேண்டும் என நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தேர்வு மையத்தில் காலை 7.30 மணிக்கே இருக்கவேண்டும். மொழி தெரியாத மாநிலம் என்பதால், தேவையற்ற குழப்பங்களும், மன உளைச்சலும் ஏற்படும் என அதில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கவேண்டும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக மாணவர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.