Skip to main content

“அம்பேத்கரை விட பிரதமர் மோடி உயர்ந்தவர் என்று பா.ஜ.க. நினைக்கிறதா?” - அதிஷி ஆவேசம்!

Published on 25/02/2025 | Edited on 25/02/2025

 

Athishi says Does BJP think that PM Modi is superior to Ambedkar

தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி பா.ஜ.க வெற்றி பெற்றது. பலகட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, டெல்லி முதல்வராக பா.ஜ.க சார்பில் ரேகா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, கடந்த 20ஆம் தேதி ரேகா குப்தா டெல்லி முதல்வராகப் பதவியேற்றார். அவரோடு, 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் டெல்லி சட்டமன்றத்தின் 3 நாள் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று (24.12.2025) தொடங்கியது.

இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதற்கிடையே டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், மற்றும் பகத்சிங் ஆகியோரது உருவப்படங்கள் அகற்றப்பட்டன. இதற்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை இன்று (25.02.2025) மீண்டும் கூடியது. அப்போது ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் இது தொடர்பாக முழக்கம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லியின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி உட்பட 11 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இன்று ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அதிஷி உட்பட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக அதிஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், “டெல்லி முதல்வரின் அலுவலகம், அமைச்சரவையின் அமைச்சர்கள் அலுவலகத்தில் இருந்த டாக்டர் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் உருவப்படத்தை மாற்றிவிட்டு, பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடியின் உருவப்படத்தை மாற்றியுள்ளனர். டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை விடப் பிரதமர் மோடி பெரியவரா?. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் உருவப்படம் அதே இடத்தில் வைக்கப்படும் வரை நாங்கள் போராடுவோம். பிரதமர் மோடி, டாக்டர் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரை விட உயர்ந்தவர் என்று பாஜக நினைக்கிறதா?.

சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் முழக்கங்களை எழுப்பியதால், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் பாஜக எம்.எல்.ஏ.க்கள் பிரதமர் மோடியின் கோஷங்களை எழுப்பியபோது, ​​சபாநாயகர் எதுவும் பேசவில்லை. இதன் பொருள் என்னவென்றால் டாக்டர் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரை பாஜக வெறுக்கிறது என்று அர்த்தம்” ஆவேசமாகப் பேசினார். இதற்கிடையே டெல்லி சட்டமன்றத்தில் சிஏஜி அறிக்கையை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார். 

சார்ந்த செய்திகள்