
சென்னை கொளத்தூர் உள்ள பெரியார் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையான பெரியார் அரசு மருத்துவமனையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.02.2025) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “எல்லா பிறந்தநாளுக்கும் ஒரு திட்டத்தை அறிவிப்பது போன்று இந்த பிறந்தநாளுக்கு என்ன திட்டம் அறிவிக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் மனநிறைவான ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். மாற்றுத் திறனாளிகள் என்ற பெயர் கொடுத்து, சகோதர சகோதரிகளின் சுயமரியாதையைக் காத்தவர் கலைஞர். அவரது வழியில், அந்த துறையை என்னுடைய பொறுப்பில் வைத்துக்கொண்டு, நிறையத் திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம்.
அந்த வகையில் மாற்றுத்திறனாளி சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு அதிகாரத்தில் பங்களிக்க, அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரியப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரியப் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றில் வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். இதன்மூலமாக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் இடம் பெறுவது உறுதிசெய்யப்படும்.
அவர்களின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும். அதிலும் முக்கியமாக விளிம்பு நிலை மக்களான மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம் பெறுவார்கள். பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து அதிகாரமும் கிடைக்கும் நோக்கத்தோடு உருவானதுதான் திராவிட இயக்கம். இந்த இயக்கத்தின் இலக்குகளை மெய்ப்பிக்கும் திராவிட மாடல் ஆட்சிதான். திருநர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் அப்படிப்பட்ட வாய்ப்புகளைத் திறந்து விடும் அரசாக இருக்கிறது என்பதன் அடையாளம்தான், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கும் பிரதிநிதித்துவம்.
இதுதான் உண்மையான சமூகநீதி அரசு. பெரியார் அரசு. இது மாதிரியான திட்டங்களைச் செயல்படுத்தும் போதுதான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து முற்போக்கான கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கான பலன் விளைகிறது என்று மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற ஏராளமான திட்டங்களை ஏற்கெனவே செய்திருக்கிறோம்! இனியும் தொடர்ச்சியாகச் செய்வோம். அப்படித் தொண்டாற்றுவதுதான் எனது வாழ்நாள் கடமை” எனப் பேசினார்.