உச்சநீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா பதவியேற்றார்.
மூத்த பெண் வழக்கறிஞரான இந்து மல்கோத்ராவின் பதவியேற்பு விழா உச்சநீதிமன்றத்தில் இன்று காலை நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா பதவியேற்பு விழாவிற்கு தலைமை தாங்கினார். பார் கவுன்சிலின் மூத்த பெண் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கும் வாய்ப்பை இந்து மல்கோத்ரா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற நியமனக் குழுவான கொலீஜியம் மூத்த வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா மற்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய, கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்தது. இந்த பணி நியமன பரிந்துரையை கடந்த புதன் கிழமை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இந்து மல்கோத்ராவின் நியமனத்திற்கு மட்டும் ஒப்புதல் அளித்து, நீதிபதி கே.எம்.ஜோசப் மீதான பரிந்துரையை நிராகரித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா இன்று பதவியேற்றுள்ளார். உச்சநீதிமன்றத்தில் இந்து மல்கோத்ராவோடு சேர்த்து ஏழு பெண் நீதிபதிகள் இனி செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எம்.ஜோசப் மீதான பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்திருந்தாலும், மீண்டும் கொலீஜியம் அவரை பரிந்துரை செய்தால் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்தே ஆகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.