
தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பெங்களூர் ஸ்ரீராமபுரத்தில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் குமார் மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்குப் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. ஆடல் பாடலுடன் மாலை கலை நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் புகழேந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் பதவிக்காக நான் பொதுச் செயலாளர் நீ பொதுச் செயலாளர் என அடித்துக் கொள்கிறார்கள். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வளர்த்த இயக்கம் என்றுமே நிலைத்திருக்கும். அதற்குக் காரணம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உயிரோட்டம் உள்ள தொண்டர்கள் நடத்துகின்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டங்கள் நிகழ்ச்சிகள் மூலம் அறிய முடியும். சமீபத்தில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் பல வருடங்களுக்குப் பின்னால் இங்கே திரையிடப்பட்டது. அந்த படம் மூன்று வாரம் ஓடி சாதனை படைத்திருக்கிறது.
படம் தியேட்டரில் துவங்கி முடியும் வரை ரசிகர்கள் ஆரவாரம் கட்டுக்கடங்காமல் இருந்தது இன்றும் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நம் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து தமிழகத்தில் இருக்கின்ற தலைவர்கள் திருந்த வேண்டும். ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சிக்காகத் தொடர்ந்து நான் பாடுபடுவதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதிமுக தொண்டர்கள் ஆதரவு தொடர்ந்து வேண்டும். நாம் எடுக்கின்ற முயற்சியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்” எனப் பேசினார்.